பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை (21.01.2026) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தொழிற்சாலைக்கான பெயர்ப்பலகை மற்றும் அடிக்கல் ஆகியன பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணியாளர்களால் திறக்கப்பட்டு, அடிக்கல் நடுகை செய்யப்பட்டமை உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வின் இறுதியில் நிகழ்வின் ஞாபகார்த்தமாக மரநடுகை இடம்பெற்றது.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் மரகன்றுகளை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன்,முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்
நாட்டிவைத்தனர்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் இந்த ஆண்டுக்கான விசாரணை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.
கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் வவுனியாவில் விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலமர்வு நீதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிலையில் இன்று விசாரணைகளை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற 69 முறைப்பாடுகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட தொழிற்சந்தை.
கிளிநொச்சி மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட தொழிற்சந்தை 2026 இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த தொழிற்சந்தையினை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆரம்பித்து வைத்தார்.
மாவட்டத்தில் தொழில் நாடுவோருக்கு தொழில் ஒன்றைத் தெரிவு செய்வதற்கான அரியதோர் சந்தர்ப்பமாக குறித்த தொழிற்சந்தை அமைந்திருந்தது.
குறித்த தொழிற்சந்தையில் தொழில் வெற்றிடங்களிற்கான ஆட்சேர்த்தல் ,தொழிற்பயிற்சி கற்றல் வழிகாட்டல் போன்ற பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வு தொடர்பான விளக்கவுரையினை மனிதவலு வேலைவாய்ப்பு பிரிவு மாவட்ட இணைப்பாளர் சி.சிவசொரூபன் நிகழ்த்தினார்.
குறித்த தொழிற்சந்தையில்,தனியார் உற்பத்தி நிறுவனங்கள்,பாதுகாப்புச் சேவை,சந்தைப்படுத்தல் துறை,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,ஹோட்டல் துறை,காப்புறுதித் துறை,கணக்கியல் துறை,பண்ணை வேலையாட்கள் போன்றவற்றில் காணப்படும் வேலைவாய்ப்பு தொடர்பில் 23 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
அத்துடன் கணினித்துறை,தாதியர் பயிற்சி நெறி,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற தொழிற்பயிற்சி நெறிகள் தொடர்பாக பயிற்சி வழங்கும் 07 நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன.
தொழில் தேடுநர்களாக 254 பேர் பதிவு செய்திருந்தனர்.
குறித்த தொழிற்சந்தையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,IOM நிறுவன மாவட்ட இணைப்பாளர் சலீம் ஜெமீன், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்திலுள்ள பல இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.