தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமூக பொறுப்புணர்வுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் வெளிப்புறப் பகுதியை சுத்தமாகவும் ஒழுங்காகவும் மாற்றும் வகையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பணியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒருமித்துப் பங்கேற்றனர்.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வில் பங்கேற்பு.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை (21.01.2026) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தொழிற்சாலைக்கான பெயர்ப்பலகை மற்றும் அடிக்கல் ஆகியன பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணியாளர்களால் திறக்கப்பட்டு, அடிக்கல் நடுகை செய்யப்பட்டமை உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது.
வரவேற்புரையை நிறுவனத்தின் தலைவர் ச.நேசராஜா நிகழ்த்தினார்.
தொடர்ந்து கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுனர் கெளரவ நா.வேதநாயகன் ,கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளைப் பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேளமாலிகிதன், முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
1954 இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கூட்டுத்தாபனமாக்கப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் இரசாயனத் தேவையைப் பூர்த்தி செய்த ஒரு பாரிய அச்சாணியாகத் திகழ்ந்தது
போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில், அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலம் 30 மாதங்களில் இத்தொழிற்சாலை முழுமையாக நிறுவப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.
காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் (20.01.2026) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிராமிய அபிவிருத்தி பணியகம் 75.63மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய செய்கைக்காக ஒதுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து குறித்த திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
குறித்த விவசாய சமூக பண்ணையில் 20 பச்சை வீடுகளும், 10 வலை வேலித் துண்டங்களும் அமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக குறித்த பகுதியினை சேர்ந்த விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பயிர்ச்செய்கை மேற்கொள்ள சந்தர்ப்பமளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சுழற்சி முறையில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில்
அரசகரும மொழிகள் திணைக்களத்தினால்
நடாத்தப்பட்டு வருகின்றன.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்தும் நோக்கத்திற்கமைய கிளிநொச்சி மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட சிங்கள மொழி பயிற்சிநெறியின் இறுதிநாள் நிகழ்வு மாவட்டச்செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது சிங்கள பாரம்பரிய கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உத்தியோகத்தர்களினால் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
150 மணித்தியாலங்களைக் உள்ளடக்கிய இக் கற்கை நெறியை 54 உத்தியோகத்தர்கள் சிறப்பாக கற்று நிறைவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் பயிற்சியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்ததோடு
இரண்டாவது மொழியினை கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் அரச பணியில் அதன் முக்கியத்துவத்தினையும் குறிப்பிட்டதோடு தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு உத்தியோகத்தர்களின் ஆளுமை, செயற்திறனில் நிச்சயமாக ஓர் மாற்றத்தினை கொண்டு வரும் என்பதனை தனது உரையில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந் நிகழ்வில் சிங்கள கற்கைநெறியினை வழங்கிய வளவாளர் K.P.R.N.Ekanayakke,மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,பயிற்சியினை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள்,மாவட்டச்செயலக ,பிரதேச செயலக மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு
கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று(22.01.2026 )பி.ப 2.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
குடிசார் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் தலைமையில் ஆரம்பமான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரின் இணைத்தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் காலாண்டுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இன்றைய கூட்டத்தில் கடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
தொடர்ந்து சமூகத்தில் அடையாளம் காணப்பட்டு இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய ஊராட்சி முற்றத்திற்கு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், அவற்றிற்கான தீர்வுத் திட்டங்கள் மற்றும் தேவையான ஆலோசனைகள் துறைசார்ந்த திணைக்களத்தலைவர்களால் வழங்கப்பட்டன.
குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்படும் போது அவர்களின் வாழ்வாதாரம் ,சுகாதாரம், கல்வி, காணி, வீதி அபிவிருத்தி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கான உள்ளடங்கலான தீர்வுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளுடன் முன்னோக்கி செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , பல் துறை சார் அரச உயர் அதிகாரிகள், கிறிசலிஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர்கள் , கிளிநொச்சி மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.