இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (04) திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,சிரேஸ்ர சாரண உறுப்பினர்கள்,சாரண மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய பவணி மற்றும் சாரணர் மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் மரியாதை அணிவகுப்பு நடை பவனியுடன் ஆரம்பித்த சுதந்திர தின நிகழ்வில் தாய்த்திரு நாட்டின் தேசிய கொடி அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரைகளை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பயன்தரு மரக்கன்றுகள் மாவட்டச்செயலக வளாகத்தில் நடப்பட்டதோடு மாவட்டச்செயலகத்தின் வெளிப்புற சூழலில் சிரமதான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.