கிளிநொச்சி மாவட்டத்தில் தீர்க்கப்படாமல்  நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக காணி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் நீண்டகாலமாக வசித்து வருகின்ற குடியிருப்பாளர்களுக்குரிய  அனுமதிப்பத்திரம் வழங்கல், ஹிமிகம திட்டத்தின் கீழ் காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கல், LRC (Land Reform Commission) காணிகள் தொடர்பான விடயங்கள், மேலும் நீண்டகால குத்தகை அடிப்படையிலான காணி வழங்கல் போன்ற முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முன்னதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாவட்ட மட்ட கலந்துரையாடல்கள், அமைச்சர் மட்ட மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான சந்திப்புகள் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்வது, நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் உள்ள LRC காணி விவகாரங்கள், அனுமதிப்பத்திரங்களிலிருந்து நிரந்தர உரிமை அளிப்பு பத்திரம் வழங்கும் நடைமுறை ஆகியவை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டதோடு தீர்வின் பொருட்டு நடமாடும் சேவை உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டன. இந் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இக் கலந்துரையாடல் அமையப்பெற்றிருந்தது. அதிக நிலுவையில் உள்ள காணி கோப்புகளை விரைவாக பரிசீலித்து, சட்டப்பூர்வமான தீர்வுகளை வழங்குவது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் தாமதங்களை குறைப்பது என்பதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்தது.எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று, கிளிநொச்சி மாவட்ட மக்களின் காணி தொடர்பான நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சிரேஸ்ட நில அளவை உத்தியோகத்தர், மாகாண காணி அலுவலக சிரேஸ்ட காணி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
படங்கள்: