பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வில் பங்கேற்பு.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை (21.01.2026) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தொழிற்சாலைக்கான பெயர்ப்பலகை மற்றும் அடிக்கல் ஆகியன பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணியாளர்களால் திறக்கப்பட்டு, அடிக்கல் நடுகை செய்யப்பட்டமை உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது.
வரவேற்புரையை நிறுவனத்தின் தலைவர் ச.நேசராஜா நிகழ்த்தினார்.
தொடர்ந்து கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுனர் கெளரவ நா.வேதநாயகன் ,கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளைப் பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேளமாலிகிதன், முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
1954 இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கூட்டுத்தாபனமாக்கப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் இரசாயனத் தேவையைப் பூர்த்தி செய்த ஒரு பாரிய அச்சாணியாகத் திகழ்ந்தது
போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில், அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலம் 30 மாதங்களில் இத்தொழிற்சாலை முழுமையாக நிறுவப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.